Friday, June 24, 2011

ஃபேஸ்புக்கா? நோட்புக்கா?

அம்மா என் நோட்புக்கை காணோம் என்று அப்பாவியாக திரிந்து கொண்டிருந்த குழந்தைகள், தற்போது ஃபேஸ்புக்கில் அநாயசமாக புகுந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதென்ன ஃபேஸ்புக்? நம் நோட்டு புத்தகத்தில் நாம் மட்டுமே எழுதுவோம். நாம் விரும்பினால மட்டுமே மற்றவர்களுக்கு காட்டுவோம். ஆசிரியர்கள் சொல்வதைத்தான் நாம் எழுதுவோம். நாம் எழுதியதில் தவறு இருந்தால் ஆசிரியர் திருத்துவார். பெற்றோர்கள் அதை வாங்கிப் பார்ப்பார்கள்.

நம் ஃபேஸ்புக் என்பது ஒரு virtual உலகம். இன்டர்நெட்டில் இருக்கக் கூடிய ஒரு மாய புத்தகம். இந்தப் புத்தகத்தில் நீங்களும் எழுதலாம், உங்கள் நண்பர்களும் எழுதலாம். உங்கள் புத்தகத்தில் இருந்து அடுத்தவர் புத்தகத்திற்கு எளிதில் தாவலாம். அடுத்தவர், லாஸ்பேட்டையிலும் இருக்கலாம், லாஸ்ஏஞ்சல்ஸிலும் இருக்கலாம். அதாவது நமது புத்தகம் ஒரு திறந்த புத்தகம். இதில் எழுத்து, ஆடியோ, வீடியோ என சகலமும் இருக்கும். இதை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமே ஃபேஸ்புக்.


இதில் என்ன பிரச்சனை? பிரச்சனை இதில் அல்ல. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்.

அவர் :
போன வாரம் பசங்களோட ஊட்டி போயிட்டு வந்தோம். வந்த அடுத்த நாளே, எங்களோட ஃபோட்டோ எனக்கே இமெயில்ல வருது. எனக்கு ஷாக். ஏன்னா நான் யாருக்குமே ஃபோட்டோவை அனுப்பல. விசாரிச்சதுல, சின்னவன் தான் ஃபேஸ்புக்ல ஃபோட்டோவை போட்டிருந்தான்னு தெரியவந்தது. அவன் 9thதான் படிக்கறான்.அதுக்குள்ள எப்படி இதையெல்லாம் பழகினான்னே தெரியல. உனக்குதான் கம்ப்யூட்டர் பத்தி எல்லாம் தெரியுமே.. ஃபேஸ்புக்னா என்னது..? அதுல இவன மாதிரி சின்னப்பசங்கள்லாம் இருக்கலாமா? கூடாதா?

அவர் சொல்லும்போதே, முகம் சிவந்து, கோபம் பொத்துக் கொண்டு வருவதை யூகிக்க முடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த +2 பையனை, எல்லாம் இவனாலதான்.. இவன்தான் அவனுக்கு கத்துக் கொடுத்திருப்பான் என்று அவனை கடிந்து கொள்ள ஆரமபித்தார். நான் இடை மறித்தேன். எனக்கு மாணவர்களையும், குழந்தைகளையும் கடிந்து கொள்வது பிடிக்காது. அவர்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொன்னால், எதையும் புரிந்து கொள்வார்கள் என்பது என் கருத்து.

நான் :
அவசரப்பட்டு குழந்தைகளை திட்ட வேண்டாம். அவர்கள் ஒன்றும் கிரிமினல் வேலைகளைச் செய்யவில்லை. சொல்லப் போனால், இந்த கால கட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும், தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத் தளம் (Social Networking Site) அது ஒரு வெப் சைட் அவ்வளவுதான். அங்கு நாம் நம் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதியதை பார்த்து கமெண்ட் கொடுக்க யாராவது வேண்டுமல்லவா, அதனால் நமக்கு நண்பர்கள் தேவை. எனவே நண்பர்களை இணைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடி பகிரந்து கொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் ஊட்டி புகைப்படத்தை, உன் மகன் இப்படித்தான் தன் நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளான் என்று நினைக்கிறேன்.

அவர் :
அவனாவது பரவால்ல. ஃபேஸ்புக்கோட சரி. இவன் Myspaceன்னு இன்னும் எது எதுலயோ மெம்பர் ஆகி வைச்சிருக்காங்க. படிக்கறதே இல்ல. சதா அதுலயே இருக்கான். உன்னை.... (என்று மீண்டும் மகனை அடிக்க கை ஓங்கினார்)

நான் :
அடடா...என்ன இது வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு சின்னப் பையனை இப்படி அதட்டுற. அவன் ஒண்ணும் தப்பு பண்ணல. Facebook என்பது போல Myspace என்பதும் ஒரு சமூக வலைத் தளம். இதுல மெம்பர் ஆகறதால ஒரு தப்பும் கிடையாது. உன் மகன்களைப் போலவே இதுல தினமும் குத்துமதிப்பா ஒரு நாளைக்கு 3 இலட்சம் பேர், உலகம் முழுக்க மெம்பர் ஆகிக்கிட்டே இருக்காங்க. ஃபேஸ்புக்ல இது வரைக்கும் 20 கோடி பேர் மெம்பர் ஆகியிருக்காங்க. அதுல நானும், உன் மகன்களும் இருக்கோம். இத்தனை பேர் அதுல இருக்கும்போது, அதைப் பத்தி தெரியாம இருந்தால்தான் தவறு. உன் மகன்களை பாராட்டு. அவங்க updatedஆ இருக்காங்க.

இதைக் கேட்டதும் அவருக்கு என் மேல் கோபம் வர ஆரம்பித்துவிட்டது.

அவர் :
பசங்களுக்கு நல்ல புத்தி சொல்லுவேன்னு கூட்டிட்டு வந்தா, நீ அவங்களுக்கு வக்காலத்து வாங்கறயே.. இத்தனை கோடி பேர் ஃபேஸ்புக்ல மெம்பரா இருக்காங்கன்னா, ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கும். ஃபேஸ்புக்கால நமக்கு என்ன பிரயோஜனம் சொல்லு?

நான் :
இது நல்ல கேள்வி. ஃபேஸ்புக், மை ஸ்பேஸ் போன்ற எல்லா தளங்களிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. முதலில் நல்லதுக்கு வருகிறேன். இது தகவல் யுகம். SMS, Email என்று எல்லாமே எக்கச் சக்க வேகம். இதோட அடுத்த கட்டம்தான், சோஷியல் நெட் ஒர்க்கிங். ஒருத்தருக்கு எப்படி இமெயில் பற்றியும், எஸ்.எம்.எஸ் பற்றியும் தெரிந்து இருக்கணுமோ, அதே போல ஃபேஸ் பற்றியும் தெரிஞ்சு இருக்கணும். ஏன்னா? ஒரு தகவலை உடனடியா, உலகின் பல்வேறு திசைகளில் இருக்கும் பலருக்கும், ஒரே ஒரு கிளிக்கில் தெரிவிக்க ஃபேஸ்புக்கால் முடியும். ஊட்டியில நீங்க எடுத்த ஃபோட்டோ, மொபைல் போன் வழியா, சென்னையில இருக்கற உங்க கம்ப்யூட்டருக்கு வந்து, அங்கே இருந்து ஃபேஸ்புக் வழியா, உலகம் பூரா பரவி, ஆஸ்திரேலியாவில இருக்கிற உங்க அத்தை பார்த்துட்டு, விசாரிக்கறாங்கன்னா சாதாரண விஷயமா? இது மாதிரி ஒரு கிளிக்குல ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கவிதைகள் என அனைத்தையும் ஷேர் பண்ணிக்க முடியும். இவ்வளவு நல்ல நவீன விஷயத்தை உன் குழந்தைகள் தெரிந்து கொள்ளாமல் இருந்தால்தான் நீ கண்டிக்க வேண்டும். எனவே இனி அவர்களை திட்டாதே என்றேன்.

அவர் :
நல்லதுன்னு ஒண்ணு இருந்தா, நிச்சயம் கெட்டதுன்னு ஒண்ணு இருக்கும். ஃபேஸ்புககுல பசங்கள பாதிக்கிற விஷயங்கள் ஒண்ணு கூடவா கிடையாது?
பேசிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய மகனின் பள்ளித் தோழன் கையில் ரப்பர் பந்துடன் வந்துவிட்டான். இருவரும் உடனே
விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் -
நீ சொன்னது போலவே இதில் நெகட்டிவ் அம்சங்கள் பல இருக்கு. ஆபாச படங்கள், ஆபாச வீடியோக்கள், அருவருக்கத் தக்க பேச்சுகள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் உரையாடல்கள், ஒருவரை பலர் சேர்ந்து கேலி செய்தல், பெண்களை இழித்தல், தவறான வழிகாட்டும் இரகசிய சிநேகிதங்கள் என எல்லாமும் ஃபேஸ்புக்கில் உண்டு. எப்படி நம் வீட்டுக் குழந்தைகள் இயல்பாக ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல, இவர்களை குறி வைத்து மனதைக் கெடுக்க முயற்சிப்பவர்களும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வெளி உலகம் போலவே தான் இணைய உலககும் இயங்குகிறது. கெட்டவர்களும், தீயவைகளும் இங்கேயும் உண்டு.

அவர் -
நீ சொல்வதைக் கேட்டால் பயமாக இருக்கிறது. இதை குழந்தைகளிடம் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டேன்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது எப்படி?

நான் -
இந்தக் கேள்வியை நீ கேட்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். கட்டுப்படுத்துவது என்பது சரியான வார்த்தை. குழந்தைகளிடம் சமூக வலைத் தளங்களை முழுக்க மறைக்க முடியாது. அதில் மெம்பர் ஆகக் கூடாது என்று சொல்லக் கூடாது. சொல்ல சொல்லத்தான் அவர்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், உடன் படிப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களே கூட மாணவர்களிடம் ஃபேஸ்புக் வழியாக பழகுகிறார்கள். எனவே அவர்களை தவிர்க்கச் சொல்லவே முடியாது.

அவர்-
ஃபேஸ்புக்கை முழுக்க தவிர்க்க முடியாது என்பது புரிந்து விட்டது. ஆனால் வேறு எப்படித்தான் அவர்களை கட்டுப்படுத்துவது?

நான் -
அவர்களை கட்டுப்படுத்துவதற்கு முன், பெற்றோர்களாகிய நாம் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் மற்றும் மைஸ்பேஸில் friend என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனக்கு ஃபேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்களுக்கு மேல் உள்ளனர்.

அவர் -
ஃபேஸ்புக்கில் உங்களுக்கு ஆயிரம் நண்பர்களுக்கு மேல் இருக்காங்களா?

நான் -
ஆமாம், சிலர் 5000ம் நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் நிஜவாழ்க்கை நண்பர்களுக்கும், ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நிஜவாழ்க்கையில் Friend என்பவர் யார்? நமது நம்பிக்கைக்கு உரிய, நமது சுக துக்கங்களில் பங்கு கொள்கிற, நமது குடும்பத்தினருக்கும் தெரிந்த, நம்முடன் நீண்ட நாள் பழகியவர்தான் நண்பர். ஆனால் ஃபேஸ்புக்கில் Add Friend என ஒரே ஒரு க்ளிக்கில் ஒரு நண்பர் கிடைத்துவிடுவார். ஒரு நிமிடத்திற்கு ஒரு நண்பர் கிடைத்துக் கொண்டே இருப்பார்.

அவர் -
ஃபேஸ்புக்கில் கிடைக்கிற நண்பர்கள் உண்மையானவர்களா?

நான் -
அது சந்தேகம்தான். ஒரு கிளிக்கில் எப்படி ஒரு உண்மையான நண்பர் கிடைப்பார். பழகப்பழகத்தான் தெரியும். சிலர் வேறு ஒருவரின் ஃபோட்டோவை தன் முகமாக போட்டிருப்பார்கள். சிலர் தங்கள் வயதை குறைத்துப் போடுவார்கள். சிலர் தான் பெரிய வியாபார நிறுவனத்தின் அதிபதி என பொய் சொல்வார்கள். சில ஆண்கள் பெண்கள் படத்தைப் போட்டு மற்றவர்களை ஈர்த்து பணம் கறப்பார்கள்.
அவர் -
என்ன சொல்ற நீ? நீ சொல்றதைக் கேட்டால் இன்றைக்கே, என் குழந்தைகளை முழுக்க முழுக்க ஃபேஸ்புக் பக்கம் போகவிடாமல் செய்துவிடத் தோன்றுகிறது. ஆனால் நீ என்னடாவென்றால், இருக்கட்டும் பரவாயில்லை என்கிறாய்?

நான் -
இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். நம் குழந்தைகள் ஃபேஸ்புக்கில் இருக்கட்டும். ஆனால் தான் எப்படிப்பட்ட சூழலில் இயங்குகிறோம் என்பதைத் தெரிந்து இருக்கட்டும். அதை நாம் தான் சொல்லித் தரவேண்டும். நிஜ வாழ்க்கை Friendக்கும் ஃபேஸ்புக் Friendக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை தடுப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அவர் -
நான் இப்ப தடுக்கறதே இல்லை. தடுத்தா என் கூட சண்டை போடறாங்க. அதனால வேறவழியில்லாம விட்டுடறேன்.

நான் -
குழந்தைகள் மட்டுமல்ல, ஆண்-பெண் பேதமில்லாமல் பெரியவர்களும் தற்போது இதற்கு அடிமை ஆகிவிட்டார்கள். மொபைல் போன், இமெயில் போல, ஃபேஸ்புக் உலவலும் இப்போது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. கடந்த மாத ஆராய்ச்சியின்படி ஒவ்வொருவரும் தினசரி 20 நிமிடம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் நேரம் செலவழிக்கிறார்களாம். அப்படி இருக்கும்போது, நம் குழந்தைகளிடம் இருந்து இதை மூடி வைக்க முடியாது. ஆனால் அவர்களை கண்காணிக்கலாம்.

No comments: